Feb 1, 2009

அவள், அவன், நீங்கள் மற்றும் நான் - பகுதி 3

அவனை உறைய வைத்த அவளின் காதலை சொல்ல வேண்டுமானால் கால சக்கரத்தை சிறிது பின்னோக்கி செலுத்த வேண்டி இருக்கும். பின்னோக்கி என்றதும் மனகண்ணில் ஒரு கொசுவத்தி சுருள் சுற்றுவதை போல் தோன்றினால், எச்சரிக்கை - இது ராதிகாவின் நெடுந்தொடர் அல்ல தொடர் கதை தான். கால சக்கரம் கூட ரெக்கை கட்டி கொண்டு தான் பறக்கிறது இன்றைய இயந்திர உலகத்தில். நீங்கள் ஒரு முறை இமைத்து முடிப்பதற்குள் இதோ உங்கள் கண் முன்னே அந்த நாள் வந்துவிட்டதே...

அவளை அவன் பேருந்தில் பார்த்த நாளில் அவளை பற்றி அனைத்தும் தெரிந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தான். கடல் தாண்டி இருக்கும் காதலியை ராமன் காலத்திலேயே கண்டுபிடிக்க முடிந்த போது இன்றைய கணிப்பொறி யுகத்தில் அதுவும் ஒரே நிறுவனத்தில் இருப்பவளை கண்டுபிடிக்க முடியாதா என்ன? அவள் அணிந்திருந்த அடையாள அட்டையை கொண்டு அவள் புதிதாய் சேர்ந்தவள் என்பதை உறுதி படுத்தி கொண்டான். புது முகங்களுக்கு பயிற்சி நடப்பது வேறு ஒரு அலுவலகத்தில். கண்ணின் கடைக்கண் பார்வையை கன்னியர் காட்டிவிட்டால் மண்ணின் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம், எங்கோ கேட்டது. வேறு அலுவலகம் என்பது ஒரு தடையாகவே இருக்கவில்லை அவனுக்கு. பொதுவாய், வேலை இல்லாதவர்களோ அல்லது வேலை நன்கு தெரிந்தவர்களோ தான் பயிற்சி தருவது வழக்கம். அவன் அணியிலும் அப்படி ஒருவன் இருந்தான். வேலையே இல்லாத அந்த வெட்டிக்கு பதிலாய் மறுநாள் புதியவர்களுக்கு கற்பிக்க களமிறங்கினான் நம் கதாநாயகன்.

அவன் பயிற்சி தர சென்ற அந்த குழுவில் அவள் இல்லை, அவள் வேறு பிரிவாம். கடினப்படாமல் கிடைக்கும் எதற்கும் மரியாதை இருப்பதில்லை. அதனால் தானோ என்னவோ அவளை பற்றி அவனால் சுலபமாய் தெரிந்துக்கொள்ள முடியவில்லை. அவன் கற்று தந்த விதத்தாலோ அல்லது அவனுடைய இயல்பான பேச்சாலோ அல்லது கணிப்பொறியை பற்றிய அவனுடைய ஆழ்ந்த அறிவாலோ அத்தனை பேரும் அவன் பால் ஈர்க்கபட்டார்கள். காலை நேர பயிற்சி முடிந்து உணவருந்த சென்றான். அவனோடு அந்த குழுவிலிருந்த சிலரும் உடன் சென்றார்கள். ஒரு வாசல் மூடினால் அடுத்த வாசல் திறக்குமாமே அவனுக்கும் அப்படியொரு வாசல் திறந்தது அங்கு தான். உணவு வாங்க வரிசையில் நின்றிருந்த போது அது நிகழ்ந்தது.
அவனுக்கு பின்னால் நின்றிருந்தவன் யாரிடமோ உனக்கு எப்படி செல்கிறது பயிற்சி என்று கேட்டுக்கொண்டிருந்தான். யாரிடம் கேட்கிறான் என்று திரும்பியவனுக்கு ஒரு நிமிடம் இதயம் நின்றே போனது. யாரை தேடி வந்தானோ அவளிடம் தான் கேட்டுக்கொண்டிருந்தான்.அவர்கள் பேசுவதிலிருந்து இருவரும் நண்பர்கள் என புரிந்துகொண்டான். அவன் துருப்புச்சீட்டு கிடைத்துவிட்டது. இனி அவளை பற்றி எப்படி தெரிந்து கொண்டிருப்பான் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் உங்கள் கற்பனை குதிரையை கொஞ்சம் தட்டி எழுப்பி ஓட விடுங்கள் சுலபமாய் புரிந்திடும்.

அவள் காதலை பற்றி சொல்கிறேன் என்று கூறிவிட்டு இதுவரை அதை பற்றி எதுவும் பேசவில்லையே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. இதோ அவள் காதல் இனி...

உணவு வரிசையில் நின்றிருந்த போது அவளிடம் பயிற்சி எப்படி செல்கிறது என்று கேட்டான் அவள் தோழன். ஏன் இன்று வந்தோம் என ஆகிவிட்டது அப்படி ஒரு கடி என நொந்து கொண்டாள். எங்களுக்கு அப்படியே தலைகீழ், இதுவரை இப்படி ஒரு பயிற்சி நடந்ததில்லை, இதோ இவர் தான் எங்களுக்கு பயிற்சி தருகிறார் என்று கதாநாயகனை காட்டினான் அந்த காதல் தூதுவன். சரியாய் அதே நேரம் அவளை திரும்பி பார்த்து உறைந்து போயிருந்தான் நம் தலைவன். அவள் அவனை முதல் முறையாய் பார்த்தாள். இந்த முறை அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். ஆனால் அண்ணல் மட்டும் அதை உணரவேயில்லை.

முதல் முறையாய் அவளுக்குள் ஏதோ ரசாயன மற்றம் நிகழ்வது போல தோன்றியது அவளுக்கு. இதயம் இரண்டு மடங்காய் துடித்தது, நின்று போன அவன் இதயத்திற்கும் சேர்த்து. அதுவரை அவள் காதலை சந்திக்காததால் அந்த ரசாயன மாற்றத்தை என்னவென உணர சில நாட்கள் ஆனது. பின் வந்த நாட்களில் அவனை பற்றி அவள் தோழன் பேசியதெல்லாம் அந்த ரசாயன மாற்றத்திற்கு ஒரு வினையூக்கியாய் இருந்தது. மீண்டும் ஒரு முறை அவனை பார்ப்போமா என தினம் சிந்திக்க தொடங்கினாள். அட என்ன இது, யார் என்றே தெரியாதவனை பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறேனே, இனி அவனை பற்றி நினைக்க போவதில்லை என முடிவு எடுப்பாள். பதினைந்து நிமிடத்தில் எடுத்த முடிவு மறந்து அவன் நினைவு தோன்றும். அவளை பார்த்துவிட்டு விக்ரமாதித்தனிடம் வேதாளம் சொன்னதாம், உன்னை விட அதிகமாய் முயற்சி செய்து தோற்றவள் இவளாக தான் இருக்க முடியுமென்று.

அவனை கண்ட நாளோடு அவள் காலம் உறைந்துவிட்டது ஆனால் அந்த நிமிடத்திலிருந்து காலம் கால் கடுக்க வேகமாய் ஓடி கொண்டு இருந்தது. அவர்கள் சேரும் வரை வேகமாய் ஓட காதலிடமிருந்து காலத்திற்கு கட்டளை. இறைவனை கூட பகைக்கலாம் காதலை பகைத்து காலத்தால் காலம் தள்ளி விட முடியுமா என்ன? காலம் ஓடிய ஓட்டத்தில் அவள் பயிற்சி நிறைவுக்கு வந்தது. அன்றிலிருந்து அவன் இருக்கும் அலுவலகத்திற்கு அவள் செல்ல வேண்டும். எப்படியேனும் அவனை தேடி பிடித்திட வேண்டும் என நினைத்து கொண்டிருந்தாள். எல்லோருக்கும் அணி பிரித்து தரப்பட்டது. அவள் அவளுடைய அணிக்கு சென்றதும் முதலில் கண்ணில் பட்டது அவனே, அதன் பிறகு எதுவும் அவள் கண்ணிற்கு படவே இல்லை. தன்னிலை உணர்ந்து இயல்பாகும் முன்னே அவன் வந்து வரவேற்று விட்டும் சென்று விட்டான். ஒரு வேளை அவனுக்கும் தன்னை பிடித்திருக்குமோ என நினைத்தாள். அந்த நினைப்பே மிக பெரிய ஆனந்தத்தை தந்தது. அது எப்படி இது வரை அவன் என்னுடன் பேசியது கூட இல்லை, எப்படி என்னை பிடிக்கும் என மறுகணம் நினைத்தாள். நான் கூடத்தான் அவனிடம் பேசியதில்லை இருந்தும் எனக்கு பிடித்திருக்கிறதே அது போல தான் என சமாதான படுத்திக் கொண்டாள். அவனுக்கு இப்போது என்னை பிடிக்கிறதோ இல்லையோ தெரியவில்லை ஆனால் இனி பிடித்து விடும், பிடிக்க வேண்டும் அது தான் அவன் விதி என உறுதியாய் நம்பினாள்.நாளை முதல் அவன் விதியை அவனுக்கு உணர வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

அடுத்த நாள் பிறந்தது, அவனுக்கு முன்பே பேருந்து நிலையத்திற்கு சென்றாள். அவனை பார்த்தும் நட்பாய் ஒரு புன்னகை பூத்தாள். பேருந்து வந்தது, அவளுக்கு பின்னால் சென்று அமர்ந்து கொண்டான் அவன். பயணம் தொடங்கியது, எப்படி அவனுடன் பழக தொடங்குவது என யோசித்தாள். பேருந்து அலுவலகம் அடைந்தும் அவளால் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை, பாவம் தமிழ் திரைப்படம் அதிகம் பார்க்காத வகுப்பறை முதல் வரிசை மாணவி அவள். மெலிதாய் ஒரு சோகம் அவளுக்குள் நுழைந்தது. காலை 5 மணிக்கு எழ வேண்டும் என்பதிலிருந்து தேர்வில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் எனும் வரை அத்தனைக்கும் அவள் நம்பிய குல தெய்வம் தான் இப்போதும் மாட்டி கொண்டது. அவனுக்கு தன்னை பிடிக்க வேண்டும், அப்படி செய்தால் ஊருக்கு வந்து பார்ப்பேன் இல்லாவிட்டால் அவ்வளவு தான் என மிரட்டினாள். தெய்வமாய் இருப்பது கூட கடினம் தான் போல.

அவள் வாட்டமாய் இருப்பதை கண்டு அவன் செய்தவை எல்லாம் உங்களுக்கு முன்பே கூறி இருக்கிறேன். அவன் ஏன் தனக்கு இத்தனை உதவி செய்கிறான்? ஒரு வேளை அவனுக்கும் என்னை பிடித்து விட்டதோ என நினைத்தாள். உதவி செய்பவர்கள் எல்லாம் காதலிக்கிறார்கள் என்றால் அந்த அணியில் பாதி பேர் அவளை காதலிக்கிறார்கள். பெண்கள் கொடுத்து வைத்தவர்கள், அவர்களை ஆண்களுக்கும் பிடிக்கிறது, பெண்களுக்கும் பிடிக்கிறது. ஆண்குலம் தான் பாவம், அவன் சேர்ந்த போது என்ன என்று கேட்க கூட நாதி இல்லை. ஆனால் உதவி செய்பவர்கள் அத்தனை பேரும் தினம் தன்னை பார்ப்பதும், அவள் பார்த்தால் அசடு வழிவதுமாய் இருப்பதில்லையே, அவன் மட்டுமே அப்படி இருக்கிறான். ஆக அவனுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என முடிவு செய்தாள். குல தெய்வம் வேலை பார்த்துவிட்டது, இனி நான் போய் பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.

அவள் நேர்த்திக் கடன் தீர்க்க நாளும் வந்தது. அவளுக்கு வேலை கிடைத்தால் குல தெய்வத்தின் கோவிலுக்கு குடும்பத்துடன் வருவதாய் அவள் தாய் வேண்டிக் கொண்டதாகவும் அதனால் அடுத்த வாரம் விடுப்பு எடுத்து வருமாறு அவள் தாய் கூற, அட எல்லாம் நினைத்த படியே நடக்கிறதே என ஆனந்தமாய் அவள் ஊருக்கு புறப்பட்டாள். குல தெய்வத்தின் கோவில் - அவளுக்கு வேலை கிடைத்ததற்கு அவள் தாய் நன்றி கூறி படையல் இட்டு கொண்டிருந்தாள். இறைவனோ அடுத்து அவள் என்ன கேட்க போகிறாளோ என பதறிக்கொண்டு இருந்தான். அவனுக்கு தன்னை பிடித்துவிட்டது என அவள் நம்பியதால் கிடைத்த மன நிறைவில் அவள் ஏதும் கேட்காமல் வந்து விட்டாள். இறைவன் அங்கு விசிலடித்து கொண்டாடி கொண்டு இருந்தான். முதல் நாள் மட்டுமே ஆனந்தமாய் கழிந்தது. அடுத்த நாளில் இருந்து அவன் நினைவு மேலோங்கி அவனை காண முடியவில்லையே என சோர்ந்து போனாள்.அவள் குடும்பத்தை பிரிந்து முதல் முறையாய் சென்னைக்கு படிக்க சென்ற போது அவள் அடைந்த வேதனையை அந்த வாரத்தில் மீண்டும் உணர்ந்தாள். அவள் ஊருக்கு போன ஒரு வாரத்தில் அவன் என்ன ஆனான் என்பது உங்களுக்கு தான் தெரியுமே...

அவனுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என ஆணித்தரமாய் அவளை நம்ப வைத்தது அவள் பிறந்த நாளில் அவன் செய்த செயல்கள். அவள் அலுவலகம் நுழைந்தவுடனே அவளை வாழ்த்த சென்றான் அவன். அவன் செல்வதற்குள் அணி தோழன் ஒருவன் சென்று அவளை வாழ்த்தி தேவதையை போல இருக்கிறாய் என்று சொல்லி வந்தான். அப்போது அவன் கண்களில் தெரிந்த பொறாமை அவளுக்கு அவன் நேசத்தை காட்டியது. அவள் பிறந்த நாளுக்கு அவனும் புத்தாடை அணிந்து வந்திருந்தது அவளை மேலும் நம்பவைத்தது. இன்று எப்படியும் தன்னை பிடித்திருக்கிறது என சொல்லி விடுவான் என்று நம்பியிருந்தவளுக்கு அவன் வாழ்த்து மட்டும் சொல்லி சென்றது பெரும் ஏமாற்றத்தை தந்தது. நாட்கள் ஓடியது. இருவரும் பரிமாறிக்கொள்ளும் புன்னகையை தவிர எந்த முன்னேற்றமும் நிகழ்ந்திடவில்லை. அவனாக வந்து காதல் சொல்வான் என்ற நம்பிக்கை குறைய தொடங்கியது. இனி காத்திருந்து நாட்களை வீணடிக்க வேண்டாம், நானே அவனிடம் நல்லதொரு நாளில் காதலை சொல்ல வேண்டியது தான் என முடிவு செய்தாள்.

அவன் விருது வாங்கிய அந்த நல்லதொரு நாளில் அவள் காதல் சொல்லி அவனை உறைய வைத்தது வரை உங்களுக்கு தெரியும். அதன் பிறகு நடந்தது தெரிய வேண்டுமா? சொல்கிறேன் கேளுங்கள். அவள் காதல் சொன்ன கணத்தில் உறைந்தவன், உன்னோடு நான் பேச வேண்டும் என்ற அவளுடைய அடுத்த வார்த்தையில் தன்னிலை அடைந்தான். மந்திரத்தால் கட்டுண்டவனை போல அவள் பின்னால் நடந்து சென்றான், இனி வாழ்கை முழுக்க அப்படி தானே. அவர்கள் தேநீர் வாங்கி கொண்டு அலுவலகமா அல்லது காதலர் பூங்காவா என புதிதாய் வருபவர்கள் சந்தேகிக்கும் அந்த சின்ன பூந்தோட்டத்திற்கு வந்தார்கள். அவள் பேச துவங்கினாள், அவனை சந்தித்த நாள் முதல் அன்று வரை நடந்த அத்தனையும் சொன்னாள். அவளுக்கும் கண்டதும் காதலா? அவனால் நம்பவே முடியவில்லை. அவனும் அவளை காதலிப்பதாய் கூறி, அவளை சந்தித்ததையும் காதல் வயபட்டதையும் சொன்னான். அவளை காதலிக்க வேண்டும் என்பது அவனுடைய விதி மட்டுமல்ல அவளுடையதும் தான் என்று புரிந்தது அவளுக்கு. அவளும் அவனும் அவர்கள் ஆனார்கள். அப்பாடா, அவர்கள்
இணைந்து விட்டார்கள், காதல் இட்ட கட்டளை முடிந்தது, இனி எப்போதும் போல் இயல்பாய் ஓடலாம் என பெருமூச்சு விட்டது காலம். இறைவனோ அவர்கள் திருமணம் இனிதாய் நடக்க வேண்டும் என காதல் இட்ட கட்டளைக்கு பயந்து அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான் பாவம்.

எல்லாம் சரி, அவனும் அவளும் இப்போது எங்களுக்கு பரிச்சயம் ஆனால் நீ யார் என நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்(கேட்காவிட்டாலும் சொல்வேன்!) நானும் உங்களில் ஒருவன் தான், ஒரு சிறிய வித்தியாசம், நம்மோடு இருக்கும் எத்தனையோ அவனையும் அவளையும் கவனிக்கும் ஒருவன் நான். என் கண்ணில் பட்ட சில அவனையும் அவளையும் உங்களுக்கு பரிச்சய படுத்த என் முயற்சி இது. தொடர்ந்து முயற்சிப்பேன், காத்திருங்கள். :-)

பகுதி - 1

பகுதி - 2

19 comments:

  1. நல்ல முடிவு சரவணா! காதல் கதைகளில் முடிவு "சுபம்" என்று இருபதும் மகிழ்ச்சிதான்!!

    ReplyDelete
  2. Amazing flow of writing Saravana!!

    Hats off:))

    Happy ending.......very nice!

    \\என் கண்ணில் பட்ட சில அவனையும் அவளையும் உங்களுக்கு பரிச்சய படுத்த என் முயற்சி இது. தொடர்ந்து முயற்சிப்பேன், காத்திருங்கள். :-)\\

    Expecting much more stories from you Saravana:)

    ReplyDelete
  3. // நானும் உங்களில் ஒருவன் தான், ஒரு சிறிய வித்தியாசம், நம்மோடு இருக்கும் எத்தனையோ அவனையும் அவளையும் கவனிக்கும் ஒருவன் நான். என் கண்ணில் பட்ட சில அவனையும் அவளையும் உங்களுக்கு பரிச்சய படுத்த என் முயற்சி இது.

    அப்போ இன்னொரு அவள், இன்னொரு அவன் மற்றும் நீங்கள் மற்றும் நான் எழுத வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  4. //என் கண்ணில் பட்ட சில அவனையும் அவளையும் உங்களுக்கு பரிச்சய படுத்த என் முயற்சி இது

    ஒரு அவன்- அவளை பற்றி சொல்லிவிட்டு "சில அவனையும் அவளையும்" என்று சொல்லுவது என்ன நியாயம் கதாசிரியரே??

    ReplyDelete
  5. //உங்களில் ஒருவன் தான், ஒரு சிறிய வித்தியாசம், நம்மோடு இருக்கும் எத்தனையோ அவனையும் அவளையும் கவனிக்கும் ஒருவன் நான்.


    நானும் கவனித்தால் தான் சொல்கிறேன் இது உன் சொந்த கதை போல இருக்கு என்று!! ஹி ஹி

    ReplyDelete
  6. //உங்களில் ஒருவன் தான், ஒரு சிறிய வித்தியாசம், நம்மோடு இருக்கும் எத்தனையோ அவனையும் அவளையும் கவனிக்கும் ஒருவன் நான்.


    நானும் கவனித்ததால் தான் சொல்கிறேன் இது உன் சொந்த கதை போல இருக்கு என்று!! ஹி ஹி

    ReplyDelete
  7. no words to describe da...really its amazing.....expecting more from u....

    ReplyDelete
  8. //ஒரு அவன்- அவளை பற்றி சொல்லிவிட்டு "சில அவனையும் அவளையும்" என்று சொல்லுவது என்ன நியாயம் கதாசிரியரே??//

    சக கதாசிரியரே, நான் சொல்ல வந்தது நான் பார்த்த சில அவனையும் அவளையும் பற்றி இனி எழுத போகிறேன் என்று...

    என்னவோ ரெண்டு பெரும் ஆயிரகணக்கா கதை எழுதின மாதிரி கதாசிரியரேனு பேசிக்கிறோம்.. too mucha illa?

    ReplyDelete
  9. //Expecting much more stories from you Saravana:) //

    I too expect the same :-)

    ReplyDelete
  10. //Amazing flow of writing Saravana!!

    Hats off:))

    Happy ending.......very nice!//

    Thank you divya...

    ReplyDelete
  11. //நானும் கவனித்ததால் தான் சொல்கிறேன் இது உன் சொந்த கதை போல இருக்கு என்று!! ஹி ஹி//

    அட போங்கப்பா... சொல்லி சொல்லி சலிச்சு போச்சு... தம்பி அடுத்து உன் கதை தான்...

    ReplyDelete
  12. //தம்பி அடுத்து உன் கதை தான்...
    அப்போ காமெடி ஸ்டோரி-ஆ??

    ReplyDelete
  13. Superb machi. very nice story


    But matter patha un story madhiri irukey

    Avan-Saravana
    Aval-?????

    ReplyDelete
  14. Thanks machi...

    naan enna unna maadhiriya??? neenga thaan romeo... enga ponalum ponnunga pataalathoda thaan pova. namkku idhellam work out aagadhu machi.

    "நான் அவனில்லை"

    ReplyDelete
  15. Very nicely written story saravana . I enjoyed every bit of what you wrote. Your tamil is amazing. I wish you all the best for all your endeavours. Sorry for posting my comments in englsih.

    ReplyDelete
  16. ரொம்ப நன்றி ஜானு. நீங்க எழுதுற குழந்தைங்களுக்கான கதை எனக்கு ரொம்ப பிடிச்சது...

    ReplyDelete
  17. ஹாய் படிச்சேன் ரசிச்சேன் சூப்பர்

    ReplyDelete
  18. Hai, I enjoyed your tamil and story. Continue...

    ReplyDelete