Oct 23, 2009

அறியா புள்ள தெரியா தனமா கேட்டுட்டான்...

கேள்வி கேளுங்கள் ஞானம் பிறக்கும்... யாருக்கு??? யாருக்கோ... நான் கேள்வி கேட்டப்ப எல்லாம் அடி உதை கிடைக்காம தப்பிக்கிறதே பெரிய விசயமா இருக்கு... இதுல ஞானம் பொறந்துச்சா இல்லையான்னு பாக்க நேரம் இல்லாம போச்சு... அப்படி என்ன பெருசா கேள்வி கேட்டேன்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப எல்லாம் யோசிக்காதீங்க... சின்ன சின்ன கேள்வி தான் கேட்டேன்... நீங்களே வேணும்னா பாருங்களேன்...

அப்போ நான் ஆறாம் கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன், சாரி போயிட்டு இருந்தேன் ... நாங்க எல்லாம் பாரதியார் ஜாதி... சுட்டு போட்டாலும் கணக்கும் வராது, கணக்கு பண்ணவும் வராது(இப்பவும்). கணக்கு வாத்தி வந்து ஏதேதோ சொல்லிட்டு இருந்தாரு... சுத்தமா ஒன்னும் புரியல. நான் முழிக்கிறத பாத்து எனக்கு ஞானம் பொறக்கும்னு நெனச்சு சும்மா இருக்காம என்ன ஒரு கேள்வி கேட்டாரு. அவர் கேட்ட கேள்வி இது தாங்க "ஒரு 10 அடி உயரம், 4 அடி அகலம் இருக்குற தொட்டில நிமிசத்துக்கு ஒரு லிட்டர் வேகத்துல தண்ணி விழுது. அப்போ தொட்டி நெறைய எவ்வளவு நேரம் ஆகும் சொல்லு?"

நான் தெரியாதுன்னு சொல்லி தலைய கொஞ்சம் குனிஞ்சிருந்தா ரெண்டு அடியோட அப்போவே கதை முடிஞ்சு இருக்கும், நீங்களும் இப்போ இத படிச்சு கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம். ஆனா உங்க கெட்ட நேரமோ, இல்ல அந்த வாத்தி கெட்ட நேரமோ இல்ல என் கெட்ட நேரமோ தெரியல, எனக்கு புத்திசாலி தனமா ஒரு கேள்வி தோனுச்சு. அது என்னனா "இத தெரிஞ்சிகிட்டு நான் என்ன சார் பண்ண போறேன்?". அப்போ கூட அவர் கடுப்பாகி நாலு சாத்து சாத்தி இருக்கலாம், அத விட்டுட்டு, நல்ல மனுஷன், எனக்கு புரிய வெச்சே தீருவேன்னு பதில் சொன்னாரு. "தம்பி, நாளைக்கு உங்க அம்மா உன்ன தொட்டில தண்ணி நிரப்ப சொல்றாங்க, அப்போ இந்த கணக்கு தெரிஞ்சா தண்ணி ரொம்ப எவ்வளவு நேரம் ஆகும்னு கண்டுபிடிச்சு, சரியா தொட்டி ரொம்பும் போது போய் நிறுத்திடலாம் இல்ல?"

சனி சிம்மாசனம் போட்டு கால் ஆட்டிட்டு என் நாக்குல ஒக்காந்துட்டு இருக்கும் போது நான் எப்படி சும்மா இருக்க முடியும்? அவர் கேள்விக்கு என்னோட பதில் இது தான்... "சார், எங்க வீடு தொட்டி ஒயரம், நீளம், தண்ணி வர்ற வேகம் எல்லாத்தையும் கணக்கு எடுத்து அதுக்கப்பறம் தொட்டி ரொம்ப எவ்வளவு நேரம் ஆகும்னு கண்டுப்பிடிக்கிறதுக்கு பதிலா, தண்ணிய தெறந்து விட்டுட்டு வெளையாட போறதுக்கும், 'உனக்கு எவ்வளோ சொன்னாலும் பொறுப்பே வராது, தண்ணி ரொம்பி கீழ போகுது போய் நிறுத்திட்டு வாடான்னு' அம்மா திட்டுறதுக்கும் நடுவுல இருக்குற நேரம் தொட்டி ரொம்ப ஆகுற நேரம் அப்படின்னு கணக்கு பண்றது சுலபமாச்சே சார். நீங்க என்ன சொல்றீங்க?"

அவர் என்ன சொன்னாருன்னு சத்தியமா எனக்கு இப்போ வரைக்கும் தெரியாதுங்க. ஆனா ஏதோ திட்டி இருப்பாருன்னு நெனைக்கிறேன். எப்படி அது மட்டும் சரியா தெரியும்னா, சினிமாவுல எல்லாம் வில்லன் திட்டும் போது "ங்கோய்" அப்படின்னு ஒரு சத்தம் வருமே அதே சத்தம் தான் அப்பவும் வந்துச்சு, ஆனா கூடவே ஒரு கை அச்சும் கன்னத்துல பதிஞ்சு இருந்தது...

சரி ஸ்கூல்ல கேள்வி கேட்டா தான் அடி விழுதுனு வேற எடத்துல கேட்டா அங்கயும் அதே பதில் தான்... என்னோட நியாயமான கேள்வி சிலது சொல்றேன், நீங்களே முடிவ சொல்லுங்க...

கேள்வி 1: ஒரு நாள் news பாத்துட்டு இருந்தப்ப செய்தி வாசிக்கிற அந்த அழகான பொண்ணு சொல்லிச்சு "இங்கிலாந்து பிரதமரும் அமெரிக்க அதிபரும் ரகசிய சந்திப்பு". பக்கத்துல news "பாத்துட்டு" இருந்த நண்பர் கிட்ட கேட்டேன் "ஏன் பாஸு, ரெண்டும் பேருக்கு மட்டும் தெரிஞ்சா தானே அது ரகசிய சந்திப்பு? இப்போ தான் ஊருக்கே தெரிஞ்சிடுச்சே அப்போ அது சாதா சந்திப்பு தானே?" அவர் அங்க இருந்து ஓடறதுக்கு முன்னாடி சொன்ன பதில் "உன் கூட ஒக்காந்து news 'பாத்தேன்' பாரு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்".

கேள்வி 2: இன்னொரு நாள் சாப்பிட ஒரு ஹோட்டல் போனோம் நானும் என்னோட நண்பனும். அங்க 'buffet' அப்படின்னு எழுதி இருந்தாங்க. நான் கேட்டேன் "மச்சி பப்பே அப்படின்னு தானே சொல்றோம் எதுக்கு இந்த 't' கடசில தேவை இல்லாம போடறாங்க? அத எழுதறத விட்டுட்டு மிச்சமாகுற காசுல ஒரு பீடா எக்ஸ்ட்ராவா வெக்கலாம்லே?". இத நான் கேட்டு முடியும் போது அவன் பாக்க முடியாத தூரத்துக்கு ஓடிட்டான்...

கேள்வி 3: தமிழ், ஹிந்தி, தெலுகு படம் எல்லாம் பாத்து ரொம்ப போர் அடிச்சிடுச்சி பக்கத்துல ஒரு CD கடைல எல்லா அனிமேஷன் படமும் இருக்கு போய் வாங்கிட்டு வரலாம்னு இன்னொருத்தன் கூப்பிட்டான். அங்க போனா ஒரு CD 250 ரூபாய். அப்படி என்னங்க இதுல ஸ்பெஷல் அப்படின்னு கேட்டதுக்கு அங்க இருந்தவரு சொன்னாரு "இதுல நெறைய ஸ்பெஷல் feature இருக்கு. Deleted scenes கூட தனியா குடுத்து இருகாங்க". நான் கேட்டேன் "ஏன் சார், படத்துல இருக்க லாயக்கி இல்லேன்னு தானே அத delete பண்ணாங்க, அப்பறம் எப்படி அது special feature?" அதுக்கப்பறம் அந்த கடை பக்கம் கூட வர விட மாட்டேனுட்டாங்க...

கேள்வி 4: நல்லா பசிச்சதும் தான் சாப்பிடனும், அப்போ தான் ஒடம்புக்கு நல்லது - அம்மா ஒரு நாள் சொன்னாங்க. கண்ட நேரத்துல சாப்பிடாதடா, ஒடம்புக்கு நல்லது இல்ல - இதுவும் அம்மா தான் சொன்னாங்க. என் கேள்வி என்னனா 'கண்ட நேரத்துல பசிக்கும் போது சாப்பிட்டா ஒடம்புக்கு நல்லதா? கெட்டதா?'

நீங்களே சொல்லுங்க இந்த அறியா புள்ள தெரியா தனமா கேட்டதுல ஏதும் தப்பு இருக்கா? இத சொன்னா திட்டுறாங்க, முறைக்கறாங்க, தலை தெறிக்க ஓடறாங்க. உங்களுக்கும் இந்த மாதிரி ஞானம் வளக்குற கேள்வி இருந்தா கேளுங்க, நம்ம எல்லாம் சேந்து ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்...