Apr 15, 2009

இது காதல் காலமடி சகியே!!! - பகுதி 3

பகுதி - 1
பகுதி - 2

பாஸ் இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே யோசிச்சிகிட்டு இருப்பீங்க? எப்போ தான் களத்துல இறங்க போறீங்க?

என்ன பண்றது விக்கி? சும்மா நெனச்சதும் உடனே செய்ற அளவுக்கு சின்ன வேலையா இது?

சின்ன விஷயம் இல்ல தான் இருந்தாலும் நீங்க ரொம்ப லேட். என் பாஸ் அப்படின்னு வெளிய யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.

விக்கி உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல?

அப்பாடி கொஞ்சம் தான் ஓவரா? நான் கூட ரொம்ப ஓவரோனு நெனச்சேன்.

நேரம்டா, உன் பேச்ச எல்லாம் கேக்க வேண்டியதா இருக்கு. இன்னும் கொஞ்ச நாள் தானே, பேசிக்கோ. என் பிளான் படி சீக்கிரமே சமி வந்துடுவா அதுக்கப்பறம் இப்படி பேசினா அடி தான் வாங்குவ அவ கிட்ட.

போங்க பாஸ். அண்ணி வந்ததும் உங்க சைடு இன்னும் வீக் ஆயிடும். அவங்க என் கட்சி.

அதுவும் சரி தான். அவ எப்பவும் எனக்கு எதிர் கட்சி தான்.

என்ன பிளான் பாஸ் பண்ணி இருக்கீங்க? எப்பவும் போல வேலைக்கு ஆகாத பிளான் தானே?

நீ ரொம்ப பேசற. உன் கிட்ட நான் அத சொல்றதா இல்ல.

நல்லா யோசிங்க பாஸ். என் உதவி இல்லாம நீங்க தனியா செய்ய முடியுமா?

டேய், எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலத்துலேயே குதிரையில போய் தூக்கிட்டு வந்தவன் பிரித்விராஜ். இவ்வளவு வசதி இருக்குற இந்த காலத்துல முடியாதா என்ன? இத நான் தனியா எப்படி முடிக்கிறேன்னு பாரு.

கடைசில வந்து விக்கி எதாவது பண்ணுடா அப்படின்னு அழுது அடம் புடிச்சீங்கன்னா கூட நான் தலையிட மாட்டேன். நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். அப்பறம் உங்க இஷ்டம் பாஸ்.

"உன்னை" என்று கத்திக்கொண்டே அவன் மீது வீச கையில் கிடைத்த தொலைபேசியை எடுக்க, அதே நேரத்தில் சமி சரியாய் அழைத்தாள்.

பாத்தீங்களா பாஸ், அண்ணி என் சைடு தான்னு நான் அப்பவே சொன்னேன் இல்ல. எப்படி காப்பாத்திட்டாங்க பாருங்க என்று கத்திக்கொண்டே ஓடி மறைந்தான் விக்கி.

தொலைபேசியை எடுத்த பிரித்வி அவசரமாய் அவளிடம் கேட்டான் "நீ என் பக்கமா இல்ல அந்து மூளை இல்லாத ரோபோ விக்கி பக்கமா?"

அது தெரியல ஆனா எங்க அப்பா நம்ம பக்கம் இல்ல. அது உனக்கும் தெரியுமாமே பிரித்வி?

உங்க அப்பா கிட்ட பேசினியா, என்ன சொன்னாரு?

தெரியாத மாதிரி கேக்குற? நீ போய் அவர பாத்து பேசினதையும் சொன்னாரு.

ஆமா. எப்போ கல்யாணம்னு சொன்னாரா இல்ல இனிமே தான் நாள் பாக்க போறாரா?

உனக்கென்ன பைத்தியம் புடிச்சிருச்சா? நான் பதறி போய் பேசிகிட்டு இருக்கேன் நீ என்னடானா விளையாடிகிட்டு இருக்க.

உங்க அப்பாவ மீறி என்னை கல்யாணம் பண்ண உனக்கு சம்மதம் தானே?

நிச்சயமா. எங்க அப்பாவ இதுக்கு முன்னாடி பாத்தது எப்போனே எனக்கு ஞாபகம் இல்ல. அந்த அளவுக்கு எனக்கும் அவருக்கும் ஒட்டுதல்.

இப்போ எல்லாருமே அப்படி தானே. எங்க வீட்ல எனக்கு கல்யாணம்னு சொன்னதுக்கு "அப்படியா, சந்தோஷம். கல்யாண தேதி என்னனு சொல்லு முடிஞ்சா வரோம்னு" சொல்லிடாங்க

கல்யாண தேதியா??? என்ன சொல்ற?

ஆமா, உங்க அப்பா தான் ஒரு நல்ல நாள் பாக்க போறாரு இல்ல உன் கல்யாணத்துக்கு, அந்த நாள் தான் நம்ம கல்யாண நாள்.

பேசறத பாத்தா ஏதோ முடிவு பண்ணிட்ட போல? என்னனு என்கிட்ட சொல்லு.

உங்க அப்பாவ மீறி என்னை கல்யாணம் பண்ண நீ சம்மதம் சொல்லிட்ட இல்ல, அது போதும். இனி கவலை படாத. கல்யாண பொண்ணுனா சந்தோசமா இருக்கனும். நீ போய் நிம்மதியா தூங்கு.எல்லாம் நான் பாத்துக்கறேன்.

எனக்கு தெரிஞ்சு முதல் முறையா நீ பொறுப்பா பேசி இருக்க. அதனால நான் நிம்மதியா தூங்க போறேன். நாளைக்கு பாக்கலாம் என்று அழைப்பை துண்டித்தாள் சமி.

பாஸ், நாளைக்கு காலையில அண்ணி வீட்டுல அவங்களுக்கு கல்யாணம். இப்போ தான் தேஜஸ் கிட்ட இருந்து தகவல் வந்தது. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாராம் அவங்க அப்பா.

விக்கி நிஜமாவா சொல்ற??? நல்ல வேலை உனக்கு ஒரு girl friend இருந்ததால நான் தப்பிச்சேன். தேங்க்ஸ் விக்கி.

என் உதவி இல்லாமலே நீங்க தனியா பாத்துக்குவேன்னு சொன்னீங்க ஆனா முடியல பாத்தீங்களா. இதுக்கு தான் சொல்றது பெரியவங்க பேச்ச கேக்கணும்னு. எப்போ தான் இதெல்லாம் உங்களுக்கு புரிய போகுதோ.

அதானே, என்னடா இன்னும் விக்கி குதர்கமா எதுவும் பேசலைனு பாத்தேன். நீ அடங்கவே மாட்ட. எனக்கு இப்போ பேச நேரம் இல்ல. உன்ன அப்பறம் கவனிச்சுக்கிறேன்.

பாஸ் இன்னொரு விஷயம், அண்ணிய மறுபடியும் 2 வருசத்துக்கு அப்பறம் தான் பாப்பாராம் அவங்க அப்பா. அவர் அவ்வளோ பிஸி.

ரொம்ப நல்லதா போச்சு.சரி நான் இப்போ கெளம்பறேன். உன்ன நாளைக்கு சமியோட பாக்கறேன்.

அடுத்த நாள் காலை, "விக்கி, உங்க பாஸ் வந்து சம்யுக்தாவ கூப்பிட்டு போயிடுவாருன்னு சொன்ன. ஆனா இங்க கல்யாணமே முடிஞ்சு போச்சுடா. என்ன ஆச்சு?" என்றாள் தேஜஸ்.

என்னது கல்யாணம் முடிஞ்சு போச்சா? நேத்து ராத்திரி அண்ணியோட வரேன்னு சொல்லிட்டு போனாரு இன்னும் வரவே இல்ல. என்ன ஆச்சுன்னு தெரியலையே. நான் இப்போ அவர வேற தேடனும். உன் கிட்ட அப்பறமா பேசறேன் என்று அவன் சொல்லிகொண்டிருந்த போது வீட்டிற்க்கு வந்தான் பிரித்வி.

என்னடா விக்கி? வழக்கம் போல கடலையா? நடத்து... இனி உன் பாடு கொண்டாடம் தான் கூட்டணிக்கு ஆளு வேற கெடச்சிருச்சு. எனக்கு தான் இனி திண்டாட்டம்.

அழைப்பை துண்டித்துவிட்டு "என்ன பாஸ்? அங்க அண்ணியோட கல்யாணம் முடிஞ்சு போச்சுன்னு தேஜஸ் சொல்றா. நீங்க இங்க சந்தோசமா பேசிட்டு இருக்கீங்க?"

அப்படியா கல்யாணம் முடிஞ்சு போச்சா? சரி ஒரு பொக்கே வாங்கிட்டு வா நாம ரெண்டு பேரும் போய் குடுத்துட்டு வரலாம்.

பாஸ், சோகம் அதிகமாகி உங்களுக்கு கிறுக்கு புடிச்சு போச்சா என்ன?

எனக்கும் அப்படி தான் தோணுது விக்கி. அவனுக்கு கிறுக்கு தான் புடிச்சு இருக்கனும் இல்லாட்டி இவ்வளோ ரிஸ்க் எடுப்பானா என்றபடியே உள்ளே வந்தாள் சமி.

அண்ணி நீங்களா? உங்களுக்கு இப்போ தான் அங்க கல்யாணம் நடந்ததுன்னு தேஜஸ் சொன்னா. நீங்க இங்க இருக்கீங்க? பாஸ் இப்போ எனக்கு கிறுக்கு புடிச்சிரும் போல. என்ன நடக்குதுன்னு சொல்லுங்க பாஸ்.

என்னடா விக்கி? இது கூடவா புரியல? நீ இல்லாம என்னால ஒன்னும் பண்ண முடியாது, பெரியவங்க சொன்னா கேக்கணும்னு எல்லாம் சொன்ன. உன் சிலிகான் மூளைய கொஞ்சம் திருகி பாரு. ஏதாவது புரியுதானு.

பாஸ், சத்தியமா எனக்கு ஒன்னும் விளங்கவே இல்ல. கொஞ்சம் புரியற மாதிரி தெளிவா சொல்லுங்களேன்?

புரியற மாதிரியா? அப்போ யாரு பெரியவங்க, யாரு புத்திசாலி சொல்லு?

நீங்க தான் பாஸ். தயவு செஞ்சு சொல்லுங்க இல்லாட்டி யோசிச்சு யோசிச்சு என் சிலிகான் மூளை கருகி போய்டும்.

அப்படி வா வழிக்கு. சொல்றேன் கேளு. இன்னைக்கு காலையில சமி வீட்டுக்கு சரியா அவ கல்யாணம் நடக்க ரெண்டு நிமிஷம் இருக்கும் போது, குதிரையில போய் நின்னேன்.

குதிரையா? அத எங்க புடிச்சீங்க பாஸ்? இன்னமும் அதெல்லாம் இருக்கா என்ன?

இப்போ எங்க அதெல்லாம் இருக்கு? ப்ரித்விராஜ் காலத்துக்கு போனப்போ அங்க இருந்து அவன் குதிரை சேடக்கோட செல் எடுத்துட்டு வந்து க்ளோன் பண்ணிட்டேன்.

கலக்கிடீங்க பாஸ். ஆனா குதிரை எதுக்கு? அத விட பல ஆயிரம் மடங்கு வேகமா இப்போ பயணிக்க முடியுமே?

அது சரி தான் ஆனா அந்த ராஜா காலத்து சூழல் வேணும் இல்ல அதுக்கு தான்.

உங்க அலும்புக்கு வர வர அளவே இல்லாம போகுது. பரவால்லை, அப்பறம் என்ன நடந்ததுன்னு சொல்லுங்க.

அப்பறம் என்ன? சமிய குதிரைல ஏத்திகிட்டு கெளம்பி கோவிலுக்கு போய் கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்துட்டேன். அவ்வளோ தான்.

ஆனா அங்க அண்ணிக்கு கல்யாணம் நடக்குதுன்னு தேஜஸ் சொன்னாளே?

ஒ அதுவா? அது உன் பாஸோட புத்திசாலி தனத்துக்கு இன்னொரு உதாரணம்.

இன்னொன்னு வேறயா? அது என்ன? தெளிவா சொல்லுங்க பாப்போம்?

ப்ரித்விராஜ் சம்யுக்தாவ கடத்திட்டு வந்து கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம், அவனும் சம்யுக்தாவோட அப்பாவும் சண்ட போட்டு கடைசில ரெண்டு பேரும் வாழாமலே செத்து போனாங்க இல்ல அந்த நிலைமை எங்களுக்கு வர கூடாதுன்னு நான் பண்ண வேலை அது.

பேசறது எல்லாம் நல்லா தான் இருக்கு. என்ன பண்ணீங்கன்னு சொல்லுங்க அப்பறம் பாக்கலாம் அது புத்திசாலி தனமா இல்லையானு.

தம்பி நீ அதிகமா பேசற இருந்தாலும் சொல்றேன். ஏன்னா என் புத்திசாலி தனத்த நீ தெரிஞ்சுக்கணும் இல்ல. நேத்து உன்கிட்ட பேசிட்டு போனேன் இல்ல, எங்க போனேன் தெரியுமா? நேரா என் லேப்க்கு தான். அங்க போய் க்ளோனிங் பண்ணி சமியோட டுப்ளிகேட் ரெடி பண்ணேன்.

விக்கி, க்ளோன் பண்ண என்னோட செல் வேணும் இல்ல அது எங்க இருந்து வந்ததுன்னு உனக்கு தெரியுமா? என்னை காதலிக்க ஆரம்பிச்சப்போ என்ன பண்றோம், ஏது பண்றோம்னு புரியாம நான் கடிச்சு வீசின நகம், என் தலை முடி இப்படி எது எதோ எடுத்து வெச்சான் உங்க பாஸ். அதுல இருந்து தான் இப்போ க்ளோன் பண்ணினான்.

என்ன பாஸ்? உங்கள அறிவாளின்னு நெனச்சேன். இப்படியெல்லாம் கிறுக்கு தனமா எதோ பண்ணி இருக்கீங்க.

அந்த காலத்து சினிமால எல்லாம் காதல்னா இப்படி எதாவது பண்ணுவாங்கடா. உனக்கு இதெல்லாம் தெரியாது. ஆனா அப்படி எடுத்து வெச்சது இப்போ பயன்பட்டுச்சு இல்ல, எப்படி நம்ம தொலை நோக்கு பார்வை?

ஒ அப்போ அங்க கல்யாணம் நடந்தது க்ளோனிங் அண்ணிக்கு. சரியா?

அட உன் சிலிகான் மூளை கூட கொஞ்சம் வேலை செய்யுது போல இருக்கே. நான் காதலிச்ச பொண்ணு எனக்கு கிடைச்சாச்சு. சமியோட அப்பா ஆசைப்படியே கல்யாணமும் ஆயிடுச்சு. எப்படி?

நீங்களும் அண்ணியோட அப்பாவும் ஆசைப்பட்ட படி நடந்துருச்சு எல்லாம் ஆனா அந்த மாப்பிள்ளை பாவம் இல்ல?

பழைய சினிமால எல்லாம் இந்த மாதிரி பலி கெடாவா அமெரிக்க மாப்பிள்ளை ஒருத்தன் வருவான். அதுக்கு பதிலா இங்க அந்த கம்பெனி முதலாளி பையன். பொதுவா அந்த பலி கெடாவ பத்தி யாரும் கவலை பட மாட்டாங்க ஆனா நான் அவனுக்கும் நல்லது தான் பண்ணி இருக்கேன்.

நல்லதா? அது என்ன பாஸ்?

சமியோட க்ளோனிங் உன்ன மாதிரி பேச கத்து குடுத்து இருக்கேன் விக்கி. நீ வேணும்னா பாரு கொஞ்ச நாள்ல அவனே "போதும்டா சாமி, ஆள விடுங்க" அப்படின்னு ஓடி போய்டுவான். அப்பறமா அந்த க்ளோனிங் பார்ட்டிய உருவாக்கிய நானே முடிச்சு வெச்சிடுவேன்.

பாஸ் சொல்றதுக்கு மனசு வரல, இருந்தாலும் சொல்லி தான் ஆகணும். நானே சொல்லாட்டி வேற யாரு சொல்லுவாங்க? கலக்கிப்புட்டீங்க பாஸ். இப்போ நீங்க யார் கிட்ட வேணாலும் சொல்லிக்கலாம் நீங்க தான் என் பாஸ்னு. உங்களுக்கு முழு உரிமை தந்தாச்சு.

டேய் உனக்கு வாய் ஜாஸ்தி ஆயிடுச்சு வள வளன்னு பேசிட்டு இருக்காம போய் ஒரு பொக்கே வாங்கிட்டு வா, நாம போய் புதுமண தம்பதிக்கு குடுத்து வாழ்த்திட்டு வருவோம்.

இதோ ஒரே நிமிசத்துல வந்துடறேன் பாஸ்.

ஒரு நிமிசத்துல எல்லாம் வர வேண்டாம் எவ்வளவு மெதுவா முடியுமோ அவ்வளவு மெதுவா வா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சமியை பார்த்தபடி சொன்னான் பிரித்வி.

புரியுது பாஸ், நடத்துங்க என்ற கிளம்பி போனான் விக்கி.

அவன் அங்கிருந்து சென்றதும் "பாத்தியா அந்த மூளை இல்லாத ரோபோ கூட ஒத்துகிட்டான் நான் புத்திசாலின்னு."

இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு? மூளை இல்லாதவங்க தானே உங்கள புத்திசாலின்னு ஒத்துக்குவாங்க?

சே, நீயும் அவன மாதிரியே பேசற. இதுக்கா இவ்வளோ கஷ்டப்பட்டு உன்ன கல்யாணம் பண்ணிகிட்டேன் என்று முகத்தில் பொய் சோகத்தை காட்டினான்.

அடடா நான் சும்மா சொன்னேன். உன்ன எப்படி குஷி படுத்தனும்னு எனக்கு தெரியும் என்று அவள் அவன் அருகில் வர...

இது காதல் காலமடி சகியே... இது காதல் காலமடி!!!