Mar 23, 2009

இது காதல் காலமடி சகியே!!! - பகுதி 2

பகுதி - 1

அப்பா - மனிதர்களை விட அதிகம் இருக்கும் ரோபோக்களை தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பவர். அவர் அலுவலகம் இருக்கும் அந்தர நகரத்தில் ஒரு ரோபோவுடன் வாழ்ந்து கொண்டு இருப்பதாய் ஞாபகம். சம்யுக்தாவை அவர் பார்த்தது இரண்டு பிறந்த நாட்களுக்கு முன்பு... வருடங்களில் சொன்னால் 8 வருடங்களுக்கு முன்பு... என்ன அப்பாவும் பொண்ணும் பாத்து இத்தனை வருஷம் ஆச்சா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால் உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டியது என் கடமை - இது 2009 ஆம் ஆண்டு அல்ல...

அடடா, சம்யுக்தாவின் தந்தையார் பற்றி சிறுகுறிப்பு வரைகங்கற கேள்விக்கு பதில் எழுதுற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கேனே. சரி, வெட்டியா பேசறத விட்டுட்டு அங்க என்ன நடக்குதுன்னு பாக்கலாம் வாங்க...

அப்பா அது வந்து... என்று சம்யுக்தா இழுக்க, பிரித்வி பேச துவங்கினான்.

சார் நான் ஒரு genetic engineer. பெரிய கம்பெனில உங்க அளவுக்கு இல்லாட்டியும் ஒரு நல்ல பதவில இருக்கேன். நானும் உங்க பொண்ணும் படிக்கிற காலத்துல இருந்தே லவ் பண்ணிட்டு இருக்கோம். நாங்களே வந்து எங்க காதல பத்தி சொல்லலாம்னு இருந்தோம் அதுக்குள்ள நீங்களே தெரிஞ்சுகிட்டீங்க. அவ இல்லாம நானும் நான் இல்லாம அவளும் இருக்க முடியாது. உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்க, நான் நல்லா பாத்துக்குவேன் என்றான். நல்ல வேலை time machine ஏறி சத்யம் தியேட்டரில் பார்த்த பழைய மொக்கை காதல் படங்கள் எல்லாம் இப்போது அவனுக்கு பேச உதவி செய்தது.

தம்பி நல்லா தான் பேசறீங்க. எனக்கு கொஞ்சம் நேரம் குடுங்க நான் யோசிச்சு சொல்றேன். ரொம்ப நாளுக்கு அப்புறம் என் பொண்ண பாக்கறேன். நீங்க கிளம்பினா நாங்க கொஞ்சம் பேசுவோம்...

சரிங்க மாமா, நான் அப்புறமா உங்கள பாக்க வரேன். சமி சாயந்திரம் பாக்கலாம் என்று கூறி teleporter இயக்கினான்.

அவன் அங்கிருந்து அணுக்களாய் கரைந்ததும் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி வாங்கி வந்த புது space car சாவியை அவளிடம் தந்தார். தந்தையும் மகளும் பல விசயங்களை பேசி தீர்த்தனர். பிரித்வியை பற்றி அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. சம்யுக்தாவே தொடங்கினாள்.

அப்பா அவன பத்தி என்ன நினைக்கறீங்க? நீங்க இன்னும் ஒண்ணுமே சொல்லவே இல்லையே???

யார பத்தி கேக்கறமா? பிரித்வி???

ஆமாப்பா. நாங்க ரெண்டு பேரும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிச்சிகிட்டு இருக்கோம்...

உனக்கு சீக்கிரமே நல்லபடியா கல்யாணம் நடக்கும். அது என் பொறுப்பு. சரியா? எனக்கு நேரம் ஆச்சு நான் உனக்கு மெயில் பண்றேன்மா.

அவர் தலை அங்கிருந்து மறைந்த அடுத்த நொடி பிரித்வியை தொலைபேசியில் அழைத்தாள். அவள் முதல் முறை அழைத்துமே அவன் பேசியது விரல் விட்டு என்ன கூடிய சில தருணங்களில் மட்டுமே. அப்படியொரு தருணம் இன்று வந்தது. அவன் தொலைபேசியை எடுத்தும் சமி கத்தினாள் "அப்பா சீக்கிரமே கல்யாணம்னு சொல்லிட்டாரு"

அவனிடம் இருந்து பதிலேதும் இல்லை. அதெப்படி வரும்? சமி சொல்லி முடித்த அடுத்த கணமே அவளை காண மீண்டும் கிளம்பிவிட்டானே பிரித்வி.

சமி எதிர்முனையில் யாரும் இல்லாத தொலைபேசியிடம் பேசிக் கொண்டு இருக்க, அவன் அவளை பின்னாலிருந்து கட்டியணைத்தான்.

சே போடா... நீ பதில் சொல்லலனு எவ்வளவு பதறிட்டேன் தெரியுமா? உன் கிட்ட பேச மாட்டேன் போ என்று பொய்க் கோபம் காட்டினாள்.

மேடம் கோவப்படாதீங்க... இந்த சந்தோசத்தை கொண்டாட நாம இப்பவே வெளிய போறோம் என்று நடக்கபோவது தெரியாமல் சிறகடித்து பறந்தார்கள் இருவரும்.

நாட்கள் ஓடியது. ஒரு நாள் திடீரென விக்கி பதற்றமாய் ஓடி வந்தான்.

பாஸ், அண்ணியோட அப்பா அவங்களுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காராம். உங்களுக்கு தெரியுமா?

என்னடா விக்கி? அவர் அண்ணிக்கு கல்யாண ஏற்பாடு பண்ணல, அண்ணனுக்கும் அண்ணிக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணிட்டு இருக்காரு.

போங்க பாஸ், அப்படி இருந்தா நான் ஏன் இவ்வளோ கலவரப் பட போறேன். அவரு தன் பாஸ் பையனுக்கும் அண்ணிக்கும் கல்யாண ஏற்பாடு செய்யறாராம்.

என்ன சொல்ற விக்கி? இது உனக்கு எப்படி தெரியும்?

அது வந்து... பாஸ் நீங்க ரொம்ப நாளா யாரு கூட கடல போடறேன்னு கேப்பீங்க இல்ல அது வேற யாரும் இல்ல உங்க மாமனாரோட ரோபோட் தேஜஸ்வினி தான். போன வருஷம் எங்க get together ல இருந்து பழக்கம் என்று அசடு வழிந்தான் விக்கி. அவ தான் இந்த மேட்டர் சொன்னா. அண்ணிக்கு கூட தெரியாதாம்.

நீ இருந்ததால நான் தப்பிச்சேன். தேங்க்ஸ் விக்கி. நான் இப்போவே அவர போய் பாக்கறேன்.

பாஸ், இன்னொரு தகவல். அவரு எல்லா விசயத்திலயும் உங்களுக்கு சமமான ஆளாம். சொத்து மட்டும் ஜாஸ்தி.

இருக்கட்டும் விக்கி. அவன் கிட்ட இல்லாத ஒன்னு என் கிட்ட இருக்கு. அத வெச்சே நான் ஜெய்ச்சிடுவேன்.

அப்படி என்ன இருக்கு பாஸ்?

சமி என் மேல வெச்சிருக்குற காதல்...

நீங்க தமிழ் சினிமா பாத்து ரொம்ப கெட்டு போய்டீங்க பாஸ்.

விக்கி பேச நேரம் இல்லை. நான் இப்போ உடனே அவரை போய் பாக்கணும், நான் கெளம்பறேன்.

வெற்றியோடு திரும்பி வாங்க பாஸ் என்று வழியனுப்பினான் விக்கி.

சமியின் தந்தை அலுவலகம்...

சில நிமிட காத்திருப்புக்கு பின் அவரை பார்க்க உள்ளே அனுமதிக்க பட்டான் பிரித்வி.

அவர் செய்யும் ஏற்பாடுகள் ஏதும் தெரியாதவன் போல கேட்டான் "நீங்க கல்யாணத்தை பத்தி எதுவும் சொல்லவே இல்லையே?"

கல்யாண வேலைகள் எல்லாம் ஆரம்பிச்சிட்டேன்... சீக்கிரமே கல்யாணம். மாப்பிள்ளை கூட பாத்துட்டேன், என் பாஸ் பையன்.

அத கேள்விப்பட்டு தான் உங்ககிட்ட பேச வந்தேன். அப்படி என் கிட்ட என்ன தப்பு கண்டுபிடிச்சீங்க? ஏன் இந்த திடீர் கல்யாணம்?

அவ என் பொண்ணு... உன்கிட்ட பதில் சொல்ல வேண்டியது இல்ல...

அப்பா அம்மா கிட்ட கேட்டு கல்யாணம் பண்ற காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு இருந்தாலும் உங்க கிட்ட சொல்லிட்டு கல்யாணம் பண்ணனும்னு நாங்க யோசிச்சா, நீங்க எங்கள கேக்காம வேற ஏற்பாடு பண்ணிட்டு இருக்கீங்க.

நீங்களும் நானும் வேற ஜாதி அப்படின்னு யோசிக்கறீங்களா? இந்த 2308 வது வருசத்துல கூடவா இதெல்லாம் பாக்கறாங்க?

அதெல்லாம் இல்ல... ஜாதி பாக்குற அளவுக்கு நான் ஒன்னும் பிற்போக்குவாதி இல்ல...

உங்க அளவுக்கு நான் பணக்காரன் இல்லன்னு தயங்குறீங்களா?

பணம் பெரிய விசயமே இல்ல... இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்...

நான் நல்லவன் இல்லன்னு நினைக்கறீங்களா? உங்க பொண்ண சரியா பாத்துக்க மாட்டேன்னு தோணுதா?

அப்படியெல்லாம் இல்ல... ஆனா என் பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி தர மாட்டேன். அவ்வளவு தான்.

இதென்ன கிறுக்கு தனமா இருக்கு? காரணமே இல்லாம முடியாதுன்னா எப்படி?

அது அப்படி தான். உனக்கு குடுத்த டைம் முடிஞ்சு போச்சு. நீ போலாம் என்று கதவை காட்டினார்.

அடக்க முடியாத கோபத்தோடு வீட்டிற்க்கு வந்தான் பிரித்வி. இவ்வளவு கோபம் இதற்கு முன் எப்போது வந்தது என்று அவனுக்கு நினைவில்லை.

வாங்க பாஸ், உங்களுக்கு ஒரு சூப்பர் தகவல் வெச்சிருக்கேன். கேட்டா அப்படியே ஷாக் ஆயிடுவீங்க.

விக்கி நான் ரொம்ப கோபத்துல இருக்கேன், இப்போ எதுவும் பேசாத.

தெரியும் பாஸ். அங்க நடந்த எல்லாத்தையும் தேஜஸ் சொல்லிட்டா. அதனால தான் உங்களுக்கு உபயோக படர மாதிரி எதாவது பண்ணலாம்னு இண்டர்நெட்ல தேடினப்ப இந்த தகவல் கெடச்சது. வந்து பாருங்க பாஸ். ஒரு வேலை எதாவது ஐடியா கிடைக்கலாம் இதுல இருந்து.

அப்படி என்னடா வெச்சிருக்க? காட்டு பாக்கலாம் என்று விக்கியின் கையில் இருந்த palmtop வாங்கி பார்த்தான் பிரித்வி.

"12 ஆம் நூற்றாண்டில் அரசன் பிரித்வி ராஜ் சம்யுக்தாவை அவள் சுயம்வர மாளிகையில் இருந்து தனது "சேடக்" குதிரையில் மீட்டு சென்று திருமணம் புரிந்தான்" என்று காட்டியது அந்த மின்திரை.

பிரித்வி மனதில் ஒரு யோசனை தோன்றியது. உடனே time machine ஏறி அரசன் ப்ரித்வியின் காலத்திற்கு பயணப்பட்டான்.

***12 ஆம் நூற்றாண்டு***

சுயம்வர மாளிகை கோலாகலமாய் இருந்தது. மொத்த நாடும் தன் இளவரசியின் சுயம்வரத்திற்கு திரண்டிருந்தது. சரியான நேரத்தில் பிரித்வி அங்கு வந்து சேர்ந்தான்.

சுயம்வர மாளிகை வாசலில் ஒரு காவலாளியின் சிலை இருந்தது. அதை உற்று பார்த்த பிரித்வி அதிர்ந்து போனான். அந்த சிலை அவனை போலவே இருந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி அது. அதிர்விலிருந்து மீண்டு அந்த சிலையிலிருந்து கண்களை விளக்கி சுயம்வர அரங்கை பார்த்தான்.

தன் விருப்பமின்றி தந்தையால் ஏற்பாடு செய்யப்பட்ட சுயம்வர மாளிகையில் கையில் மலர் மாலையுடன் நடந்து வந்தாள் சம்யுக்தா(Sanyogita). ஒருவேளை சமி இளவரசியாய் இருந்தால் இப்படி தான் இருந்திருப்பாள். மீண்டும் அதிர்ந்து போனான்.

அட இது என்னடா தொல்லையா போச்சு. இவ சமி மாதிரி இருக்கா, இந்த சிலை என்ன மாதிரி இருக்கு. ஒரு வேலை மனபிரமையோ??? என பிரித்வி யோசித்து கொண்டிருந்த அதே வேளையில்...

பாரத நாட்டின் அத்தனை இளவரசர்களும் வரிசையில் நின்றிருக்க, எல்லோரையும் கடந்து அவனை நோக்கி வந்தாள் சம்யுக்தா. வாசலில் இருந்த அந்த சிலைக்கு அவள் மாலையிட மொத்த தேசமும் சிலையானது.

சரியாய் அதே நேரம் காவலாளி உடையில் இருந்த பிரித்வி ராஜ் வெளிப்பட்டு சம்யுக்தாவை தன் குதிரை சேடக்கில் ஏற்றி கொண்டு அவன் ராஜ்ஜியத்திற்கு விரைந்தான்.

பெயர் பொருத்தம் தான் இருக்குன்னு பாத்தா, சீன் கூட ஒத்து போகுதே. இதே ஸ்டைல் நானும் பயன்படுத்தி என் கல்யாணத்தை முடிக்கிறேன். தேங்க்ஸ் விக்கி, நீ எப்பவும் எனக்கு நல்லதே பண்ற என்று கத்திக்கொண்டே நிகழ் காலத்திற்கு வந்தான் பிரித்வி.

என்ன பாஸ்? ரொம்ப சந்தோசமா இருக்கீங்க??? ஐடியா ஏதும் கிடைச்சிடுச்சா?

ஆமா விக்கி. 12 ஆம் நூற்றாண்டுல பிரித்விராஜ் சம்யுக்தாவ கடத்தி கல்யாணம் பண்ணான் அது காவியமாயிடுச்சு. 24 வது நூற்றாண்டுல இந்த பிரித்வி சமிய கடத்தி கல்யாணம் பண்ண போறான், அதுவும் காவியம் ஆக போகுது பாரு.

காவியமா? கூவமா தான் ஆகும். பாதி படம் பாத்துட்டு எந்திரிச்சு வந்து அபிமன்யு கஷ்ட பட்ட மாதிரி கஷ்டப்பட்டு இருப்பீங்க நான் மட்டும் இல்லாட்டி.

என்னடா விக்கி சொல்ற? எனக்கு ஒண்ணுமே புரியலையே...

போங்க பாஸ்... உங்களுக்கு எல்லாம் எடுத்து சொல்ல வேண்டியிருக்கு. இத பாருங்க என்று மீண்டும் palmtop நீட்டினான்.

அதில் இருந்த வார்த்தைகள் "சம்யுதாவை கடத்தி திருமணம் செய்ததால் பிரித்விராஜ் மீது படை எடுத்தான் சம்யுக்தாவின் தந்தை. அந்த போரில் இருவர் தரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. அதன் காரணமாய் இரண்டு நாடுகளும் பலவீனமாகியது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி முஹம்மத் கோரி பிரித்விராஜ் மீது படை எடுத்து அவனை வீழ்த்தி கொன்றான்"

என்னடா இது? பிரித்விராஜ் இப்படி செத்து போய்டான்? என்னால ஏத்துக்கவே முடியல...

இது என்ன சினிமாவா பாஸ்? கிளைமாக்ஸ் புடிக்கலன்னு சொல்றதுக்கு? இது சரித்திரம். நடந்த உண்மை, மாத்த முடியாத உண்மை. அதனால தான் சொல்றேன் ஒழுங்கா ஒக்காந்து யோசிங்க, உருப்படியா எதாவது பண்ணுங்க, அத விட்டுட்டு கப்பி தனமா பேசிகிட்டு...

நீ சொல்றதும் சரி தான் விக்கி. ஒரு விஷயம் சொல்றேன் கேளு. பிரித்விராஜ் என்ன மாதிரியே இருந்தான், சம்யுக்தா சமிய மாதிரியே இருந்தா. ஒருவேளை அப்போ எங்களால சேந்து வாழ முடியாததால தான் இப்போ மறுபடியும் பிறந்து இருக்கோமோ?

இருக்கலாம் பாஸ். இன்னைக்கு வரைக்கும் உங்களால கண்டு பிடிக்க முடியாத சமாச்சாரமாச்சே இந்த முன் ஜென்மம், அடுத்த பிறவி...

இந்த முறை நான் நிச்சயம் இப்படி தோத்து போக மாட்டேன் விக்கி ...

என்ன பண்ண போறீங்க பாஸ்?

தெரியல... தெரியும்போது சொல்றேன், அது வரைக்கும் காத்திரு...

பகுதி - 3