தேர்வில் அவன் முதல் மதிப்பெண் பெற்று விட்டான் என்று யாரும் சொன்னால் எப்படி நம்ப மாட்டானோ அப்படி தான் இனி நாள் முழுக்க அவள் தன் கண் முன்னால் இருக்க போகிறாள் என்பதையும் நம்ப முடியாமல் திகைத்தான். ஒவ்வொரு நாளும் எப்போது 6 மணி ஆகும், வீட்டிற்கு செல்லலாம் என்று கடிகாரம் பார்த்தவன் அன்று ஏன் இந்த கடிகாரம் இவ்வளவு வேகமாக ஓடுகிறது என சலித்துக் கொண்டான். மனமில்லாமல் வீட்டிற்க்கு சென்றான், அவளை நினைத்துக்கொண்டே தூங்கியும் போனான். சூரியன் உதித்து வெளிச்சத்தை அவன் முகத்தில் அடித்தாலும், குடும்ப புகைப்படத்தில் இருக்கும் அத்தனை பேரும் ஒருவர் மாறி ஒருவராய் எழுப்பினாலும் அசராமல் தூங்குபவன் அவன். தங்கை வந்து நீரை முகத்தில் ஊற்றினால் தான் எழுவான். எழுந்ததும் ஒரு சண்டை நிச்சயம் இருக்கும். ஆனால் அன்றோ யாரும் எழுப்பாமல் தானாகவே எழுந்து தயாராகி இருந்தான். எப்படி சாத்தியமாயிற்று இது என எல்லோரும் திகைத்தார்கள். அவர்களுக்கு எப்படி தெரியும் குடும்ப புகைப்படத்தில் புதியதாய் சேர போகிறவள் அவனை கனவில் வந்து எழுப்பியது. முதல் முறையாய் பேருந்து நிறுத்தத்திற்கு சரியான நேரத்தில் வந்தான். அவள் அவனுக்கு முன்பே பேருந்து நிலையத்தில் இருந்தாள். அவனை பார்த்தும் நட்பாய் ஒரு புன்னகை பூத்தாள். அவன் அந்தரத்தில் மிதப்பதாய் உணர்ந்தான். பேருந்து வந்தது, அவள் பார்வையில் இருக்கும் படியாய் அமர்ந்தான். பெயரளவுக்கு தான் சென்னையில் இருக்கிறது கணிப்பொறி நிறுவனங்கள், உண்மையில் பெரும்பாலானவை இருப்பது என்னவோ காஞ்சி மாவட்டத்தில் தான். காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் இரண்டு மணி நேரம் பேருந்தில் பயணிப்பது பெரும் சாபக்கேடு.

எப்போதும் அரை தூக்கத்தில் அலுவலகம் நுழையும் அவன் அன்று முதல் முறையாய் உற்சாகமாக நுழைந்தான். தனக்குள் அவள் ஏற்படுத்திய மாற்றத்தை ரசித்தபடி நாளை தொடங்கினான். ஆயிரம் சூரியனின் பிரகாசத்தை தனக்குள் ஏற்படுத்திய அவள் முகம் பார்த்து வேலை துவங்கலாம் என நினைத்து அவளை பார்த்தான். அவள் முகம் பதற்றமாய் இருப்பதாய் தோன்றியது அவனுக்கு. அவனை தவிர வேறு யாரும் கவனிக்கவில்லை அதை. அவள் வாட்டத்திற்கு காரணம் எதுவாக இருக்கும்? மூளை வேலை செய்ய மறுத்தது. புதிய இடம் பழகும் வரை இப்படி தான் இருப்பாள், எல்லாம் சரியாகி விடும் என மனம் கூறியது. அதுவும் சரி தான், அவள் இந்த இடம் பழகும் வரை அவளுக்கு தேவையான அனைத்தும் செய்ய வேண்டும் என முடிவு செய்தான். அவள் இயல்பாய் இருந்தால் தான் அவன் உற்சாகமாய் இருக்க முடியும் என்ற சுயநலத்தில் தான் இதை செய்கிறான் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் வாழ்கையில் காதல் கடக்கவே இல்லை என்பது அர்த்தம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லாம் தருவது தாய்மைக்கு பிறகு காதலும் நட்பும் தான். அந்த காதல் தான் அவனை எல்லாம் செய்ய வைத்தது என உணர்ந்தீர்களானால் நீங்கள் காதலிக்க படுபவர்கள் என்பதை நான் உறுதி செய்கிறேன்.
அன்றிலிருந்து அவனுடைய ஒவ்வொரு நாளும் அவளிடம் இருந்தே தொடங்கியது, அவளிடமே முடிந்தது. அவள் இயல்பாகும் வரை அத்தனை உதவிகளும் அவள் கேட்காமலே செய்தான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. தோழி ஒருத்தியிடம் "இவன் எப்போதும் இப்படி தானா? கேட்காமலே உதவி செய்கிறானே? என்றாள். தோழியோ 'இனி அவனோடு தானே இருக்க போகிறாய், நீயே தெரிந்து கொள்வாய்' என்றாள். அவளுக்கு ஏனோ அந்த வார்த்தைகள் ஒரு அசிரீரி சொல்வது போல் இருந்தது.
தினமும் அவளை அவளுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் பார்ப்பதை எதேச்சையாக அவள் பார்த்தால் மெலிதாய் ஒரு புன்னகை பூப்பாள். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற டார்வினின் சித்தாந்தம் உங்களுக்கு புரிய வேண்டுமானால் அவன் மன ஓட்டத்தை சிறிது நேரம் பார்த்தால் போதும். அவள் புன்னகை சிந்தியதும் அது ஒன்றே போதும் வாழ் நாள் முழுக்க என்று சில கணங்கள் அவனுக்கு தோன்றும். அடுத்த கணமே அவள் புன்னகை மட்டும் போதாது, வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அவள் வேண்டும் என தோன்றும். தாவி கொண்டே இருப்பது குரங்கிற்கு மட்டும் அல்ல மனிதனுக்கும் இயல்பு தான்.

அவளை பற்றியே நினைத்து கொண்டிருந்தாலும் அவளிடம் சென்று பேசும் துணிவு அவனுக்கு வரவே இல்லை. அதிகபட்சமாய் அவளோடு அவன் பேசியது அவள் பார்க்கும் போது சிந்தும் ஒரு புன்னகை தான்.
எப்போதும் போலவே விடிந்த ஒரு திங்கள் கிழமை, அவனுக்கு மட்டும் இருளாய் இருந்தது - அவள் பேருந்து நிலையத்தில் இல்லை. சரி தாமதமாய் வருவாள் என நினைத்து கொண்டான் ஆனால் அவள் வரவே இல்லை. ஒரு வாரம் அவள் விடுமுறையில் சென்றிருப்பது பிறகு தெரிய வந்த போது முதல் முறையாய் பிரிவின் வலி புரிந்தது.

மற்ற சபதங்களை போல் நிச்சயம் இதை தூங்க விட மாட்டேன். நல்லதொரு நாளில் சொல்லி விடுவேன் என மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லி கொண்டு இருந்தான். அந்த நாளும் வந்தது. அன்று அவன் வாழ்கையில் வண்ணம் ஏற்படுத்திய வண்ணத்து பூச்சியின் பிறந்த நாள். ஒரு வாரமாய் அவளுக்கு எப்படி வாழ்த்து சொல்ல வேண்டும் என சிந்தித்து தயாராகி வந்திருந்தான் அவன். தேவதைகளுக்கே உரிய வெள்ளை நிறத்தில் ஒரு சேலை அணிந்து, காற்றோடு கவிதை பேசும் முடிகளை முடியாமல் வந்திருந்தாள் அவள். அவளை அவனுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பிடித்தது அன்று. அவன் அவளுக்கு வாழ்த்து சொல்லும் முன் அணி தோழன் ஒருவன் சென்று அவளை வாழ்த்தி தேவதையை போல இருக்கிறாய் என்று சொல்லி வந்தான். பொறாமை என்பது ஒரு வகை ஆமை என ஆணித்தரமாய் நம்பி கொண்டு இருந்தவன் அது ஆமை அல்ல என புரிந்து கொண்ட நாள் அது. வார்த்தை வராமல் வெறும் பிறந்த நாள் வாழ்த்து மட்டும் சொல்லி விட்டு வந்தான். நாட்கள் ஓடியது. இருவரும் பரிமாறிக்கொள்ளும் புன்னகையை தவிர எந்த முன்னேற்றமும் நிகழ்ந்திடவில்லை. வேதாளத்தை அவ்வளவு எளிதாக பிடித்து விட முடியுமா என்ன?
அவன் வாழ்வில் சிறந்த நாள் எதுவென இன்று நீங்கள் கேட்டால் நிச்சயம் அவன் சொல்லும் நாள் அதுவாக தான் இருக்கும். அந்த நாள்... அவன் வருடத்தின் சிறந்த தொழில்நுட்பவியலாளன் என விருது பெற்ற நாள். வாழ்வில் முதல் முறையாக அவனுக்கு அத்தனை பேர் கை தட்டியது அன்று தான் நிகழ்ந்தது. ஆனால் அந்த நாளை வாழ்வின் சிறந்த நாளாய் கருத காரணம் அதுவல்ல. அன்று மாலை அணியில் அத்தனை பேரும் ஒருவர் மாறி ஒருவராக அவனை வாழ்த்தி கொண்டிருந்தார்கள்.

அவன் காதல் மட்டும் சொல்லி அவள் காதலை சொல்ல மறந்து விட்டனே... சரி உறைந்து போயிருக்கும் அவன் மீள்வதற்குள் அவள் காதலை சொல்லி விடுகிறேன்... அடுத்த பகுதியில்...
பகுதி - 3