
"விக்கி! விக்கி! எங்க போய் தொலைஞ்ச???" என்றபடி உள்ளே வந்தான் பிரித்வி.
பாஸ் வந்துட்டீங்களா, நான் இங்க தான் இருக்கேன், நீங்க தான் வழக்கம் போல காணாம போயிடீங்க. இப்போ எங்க போனீங்க? என்றான் விக்கி.
இன்னைக்கு எழுந்ததும் என்னவோ மாதிரி இருந்தது. அதான் சரினு 4 வருசத்துக்கு முன்னாடி நான் சமி கிட்ட ப்ரபோஸ் பண்ண நாளை போய் பாத்துட்டு இருந்தேன். உனக்கு தெரியுமா விக்கி? அன்னைக்கு என்ன நடந்ததுன்னா...
பாஸ்... நீங்க இத என் கிட்ட 1814 வது முறையா சொல்றீங்க, நீங்க காதலிக்க ஆரம்பிச்சு 1412 நாள் 12 மணி நேரம் 7 நிமிசம் ஆச்சு. ஒரு நாளைக்கு ஒரு முறைன்னா கூட கணக்கு இடிக்குதே. என்ன பண்ணலாம் பாஸ்?
உனக்கு வர வர வாய் ஜாஸ்தி ஆயிடுச்சு விக்கி... இது நல்லதுக்கில்ல... சொல்லிட்டேன்
பாஸ் என்னையா திட்டறீங்க ... இப்போ நீங்க திட்டு வாங்க போறீங்க... அத நான் பாக்க போறேன்.
என்னடா சொல்ற??? சமி கால் பண்ணாளா? வழக்கம் போல இன்னைக்கும் நான் பிக் பண்ணலியா? ஹையோ செத்தேன்...
சரியா கண்டுபிடிச்சிடீங்களே... எனக்கு என்னவோ இன்னைக்கு எக்ஸ்ட்ரா திட்டு விழும்னு தோணுது பாஸ். வழக்கத்த விட இன்னைக்கு 3 கால் அதிகமா பண்ணி இருக்காங்க.
போச்சு... விக்கி சிரிக்கிறத நிறுத்துடா. அவளுக்கு போன் போடு.
பாஸ் நீங்க என்ன திட்டிடீங்க அதனால நான் நீங்க சொல்றத கேக்க மாட்டேன் போங்க என்று நேரம் பார்த்து பழி வாங்கினான் விக்கி.
"அப்படியா சரி பாப்போம். நானே கால் பண்ணிக்கிறேன், நீ ஒண்ணும் பண்ண வேணாம் போடா" என சொல்லி சமி என்று செல்லமாய் அவன் அழைக்கும் சம்யுக்தாவிற்கு கால் செய்தான்.
எதிர்முனையில் தொலைபேசி உயிர் வலிக்க அலறிக் கொண்டிருந்தது. அருகிலேயே இருந்தும் சமி கண்டு கொள்ளவே இல்லை. அவ்வளவு சீக்கிரம் கோபம் கரைந்துவிடுமா என்ன??? சில பல அலறலுக்கு பிறகு சமி தொலைபேசியை எடுத்து "என்ன? இப்போ எதுக்கு கால் பண்ண? உனக்கு என்னை ஞாபகம் இருக்கா என்ன? என்னை தவிர மத்தது எல்லாம் தான் உனக்கு முக்கியம். இப்போ எனக்கு நெறைய வேலை இருக்கு, உன் கிட்ட பேசிட்டு இருக்க நேரம் இல்லை. ஏதாவது சொல்லணும்னா சீக்கிரம் சொல்லு, நான் போகணும்" என்றாள்.
பிரித்வி வழக்கம் போல சமாதான படுத்த முயன்றான். "நான் போன் எடுக்காதது தப்பு தான். ஆனா நான் என்ன பண்ணிட்டு இருந்தேன், எங்க போனேன்னு தெரியுமா? சொல்றேன் கேளு" என்று அவன் முடிக்கும் முன்பே சமி இடைமறித்து "தெரியும், அந்த ஓட்ட time machine ஏறி எனக்கு நீ ப்ரபோஸ் பண்ண நாளுக்கு போயிருப்ப. சரியா???" என்றாள். விக்கிக்கு மட்டும் அல்ல, சமிக்கும் இதை கேட்டு கேட்டு போர் அடித்து விட்டது.
எப்போதும் இது போல சண்டை வரும் போது, சாரி, ரெண்டு பேரும் போட்டால் தான் சண்டை, எப்போதும் அவள் கோபத்தில் திட்டும் போது இப்படி ஏதாவது சொல்லி தான் சமாதான படுத்துவான். இன்று அதுவும் பலனளிக்கவில்லை. அவள் கோபத்திற்கு வேறு ஏதோ பலமான காரணம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான்.
ஹே இப்போ என்னடா ஆச்சு??? நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி திட்ற??? என்றான் பிரித்வி
நீயா??? நீ ஒண்ணுமே பண்ணல... அதனால தான் திட்டிக்கிட்டு இருக்கேன்...
அவளிடம் பேசும் போது பிரித்வி முகம் சென்ற கோணலில் இருந்தே விக்கி புரிந்து கொண்டான் அவனால் தனியாக இன்று அவளை சமாதான படுத்த முடியாது என்று. விக்கி அவனுக்கு உதவி செய்ய முடிவெடுத்தான். அவள் கோபத்திற்கு இன்று காரணம் எதுவாக இருக்கும் என ஆராய தொடங்கினான்.
நான் என்ன பண்ணல சொல்லு? உன் கூட செலவு பண்ண நேரம் இருக்காதுன்னு எனக்கு வந்த பதவி கூட வேணாம்னு சொல்லிட்டேன்.
கரெக்ட், வேணாம்னு சொன்ன ஆனா என் கூட நீ எங்க இருக்க??? அப்படியே கூட இருந்தாலும் அது மட்டுமே போதுமா??? லவ் பண்ண ஆரம்பிச்சு 4 வருசம் ஆகுது, நான் ஏன் கோவமா இருக்கேன்னு கூட உன்னால கண்டு பிடிக்க முடியல...
அவள் கோபத்திற்கு காரணம் எதுவாக இருக்கும் என்று அவன் யோசிக்க தொடங்கிய அதே நேரம், விக்கி விசிலடித்து கொண்டே வந்தான். பாஸ், அவங்க கோபத்திற்கு காரணம் என்னனு கண்டு பிடிச்சிட்டேன். இன்னைக்கு feb 29, அவங்க பிறந்த நாள், நீங்க மறந்துடீங்க என்று தன் வயிற்றில் இருக்கும் கணிப்பொறி திரையில் அடித்து காட்டினான் விக்கி.
அடடா... நாலு வருசத்துக்கு ஒரு முறை வரும் பிறந்த நாளை எப்படி மறந்தேன்??? அவ கோவம் நியாயம் தான் என்று நினைத்துக்கொண்டான். விக்கியின் தகர மண்டையில் தட்டி கொடுத்து "இதுக்கு தான் இப்படி ஒரு புத்திசாலி ரோபோவ கூடவே வெச்சுக்கணும்" என்று டைப் அடித்து காண்பித்தான். விக்கி கண்களில் இருந்த இரண்டு பல்பும் பிரகாசமாய் மின்ன, விசிலடித்து கொண்டே திரும்பி சென்றான்.
சமி, போன் வேலைக்கு ஆகாது பத்தே நிமிசத்துல நான் அங்க வரேன், நாம பேசலாம் சரியா? என்று சொல்லி அவள் பதில் சொல்லும் முன்பே போனை வைத்து விட்டான் பிரித்வி.
அடுத்த நொடி பரபரப்பாய் இங்கும் அங்கும் அவன் ஓட தொடங்கியதும் time machine தேடுகிறான் என புரிந்து கொண்டு அவன் கேட்கும் முன்னரே கொண்டு வந்து கொடுத்தான் விக்கி.
சூப்பர் விக்கி. சொல்லாமலே சரியா கண்டிபிடிச்சு கொண்டு வந்து குடுத்துட்ட... சரி இன்னொரு வேலை செய். 4 வருசத்துக்கு ஒரு முறை பூக்குற பூ இருக்கானு தேடி கண்டுபிடி அதுக்குள்ள வந்தடறேன் என்று சொல்லி கிளம்பினான் பிரித்வி.
அவன் தேவதை பூமிக்கு வந்த அந்த நாளை, அவள் முதல் முறையாய் தாயின் ஸ்பரிசத்தை உணர்ந்த அந்த கணத்தை அவன் canon கொண்டு உறைய வைக்க அவள் பிறந்த அந்த பொன் நாளுக்கு சென்றான். அவள் தாயின் கை அவள் மேல் பட்ட அந்த கணத்தை புகைப்படம் எடுத்தான் அவளுக்கு பிறந்த நாள் பரிசாய் தர. கிளம்ப எத்தனிக்கும் தருவாயில் அவள் ஒரு மந்திர புன்னகை பூக்க, அங்கிருந்து நகர மனமில்லாமல் அப்படியே நின்று போனான். இந்த சிரிப்பை இப்படியே விட கூடாது, எப்போதும் தன்னோடே இருக்க வேண்டும் என்று நினைத்து அவள் சிரிப்பதை புகைப்படமெடுத்து அங்கிருந்து திரும்பி வந்தான்.
அவன் வந்து சேர்ந்ததும் விக்கி ஆவலாய் கேட்டான் "எங்க போயிருந்தீங்க பாஸ்? என்ன வாங்கிட்டு வந்தீங்க?"
விக்கி அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்ல... 4 வருசத்துக்கு ஒரு முறை பூக்குற பூ கண்டுபிடிச்சியா?
இல்ல பாஸ். 8 வருசத்துக்கு ஒரு முறை பூக்குற பூ இருக்கு, 10 வருசத்துக்கு ஒரு முறை பூக்குற பூ இருக்கு, 12 வருசத்துக்கு பூக்குற பூ கூட இருக்கு ஆனா 4 வருசத்துக்கு பூக்குற பூ இல்ல பாஸ் என்றான்.
அடடா இப்போ அவளுக்கு என்ன பொக்கே குடுப்பேன் என தலையில் கை வைத்து அவனுடன் கொண்டு வந்த அவள் குழந்தை புகைப்படத்தை சோகமாய் பார்த்தான்.
பாஸ், நீங்க 10 நிமிசத்துல வரேன்னு சொல்லி இருக்கீங்க. இப்போவே 8 நிமிஷம் ஆச்சு கெளம்புங்க இல்லாட்டி அண்ணி மறுபடியும் கோசிக்குவாங்க.
அவள் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவன் கண்கள் திடீரென பிரகாசமானது. விக்கி என்ன பண்றதுன்னு கண்டுபிடிச்சிட்டேன். இந்தா இது சமியோட சின்ன வயசு போட்டோ. எப்பவும் போல உன் கற்பனைய கொட்டி இத வெச்சு ஒரு பொக்கே பண்ணு பாப்போம், அப்படியே இது அவளோட அம்மா முதல் முறையா சமிய கைல எடுத்த நிமிசத்துல எடுத்த போட்டோ இதையும் சேத்து கொண்டு வா என்றான்.
பாஸ், இத நான் சத்தியமா எதிர் பார்க்கல. எனக்கு கொஞ்சம் டைம் ஆகுமே. ஒன்னு பண்ணலாம், நீங்க இப்போ போங்க, நான் இத பண்ணி கொண்டு வந்து தந்துடறேன் என்றான் விக்கி.
அதுவும் சரி தான். teleporter தயார் பண்ணிட்டியா??? 50 செகண்ட் தான் இருக்கு.
அண்ணி வீடு அட்ரஸ் கூட அடிச்சு வெச்சிட்டேன் பாஸ். நீங்க பட்டன் தட்டினா போதும் அடுத்த செகண்ட் போயிடலாம். நாம என்ன 2010 வது வருசத்துலையா இருக்கோம் 40 மைல் போக ஒரு மணி நேரம் ஆகுறதுக்கு? teleporter கைல கட்டிக்கிட்டு எங்க போகனுமோ அந்த அட்ரஸ் அடிச்சா உங்கள வலி இல்லாம செல் செல்லா பிரிச்சு அங்க கொண்டு போய் முளுசம் மறுபடியும் உருவம் ஆகிட போகுது. வாழ்கை சுலபமாகிடிச்சு பாஸ்.
அப்படியெல்லாம் இல்ல விக்கி இன்னமும் பொண்ணுங்கள எப்படி புரிஞ்சிக்கிரதுனு யாரும் கண்டு பிடிக்கல.உனக்கு இதெல்லாம் புரியாது. நேரம் ஆச்சு நான் கெளம்பறேன். பொக்கே பண்ணி உடனே கொண்டு வா என்று சொல்லி விட்டு பட்டனை தட்டினான்...
teleporter இயக்கிய நொடியில் அவன் அணு அணுவாக பிரிக்கப்பட்டு, அடுத்த நொடி சமி வீட்டிற்கு அணுக்கள் கடத்தப்பட்டு, அதற்கடுத்த நொடியில் அணுக்களாய் இருந்தவன் ஆணாக்கப்பட்டான். அவன் அங்கு சேர்ந்த நேரம், car என்ற ஒரு வாகனம் தான் மனிதர்கள் இருபத்தியோராம் நூற்றாண்டில் பயணத்திற்க்கு பயன்படுத்தி கொண்டு இருந்தார்கள் என்று history சேனல் சொல்லிகொண்டிருந்ததை கேட்டு கொண்டிருந்தாள் சமி. தன் வருகையை பதிவு செய்ய முதல் வாக்கியத்தை சொன்னான் பிரித்வி.
நல்ல வேலை சமி, விஞ்ஞானம் வளர்ந்துடுச்சு இல்லாட்டி இந்த car ஏறி உன் வீட்டிற்கு வர வேண்டி இருந்திருக்கும். நான் வந்து சேரும் போது உனக்கு அடுத்த பிறந்த நாளே வந்திருக்கும். நல்ல வேலை தப்பிச்சேன்.
அட என் பிறந்தநாள் இவனுக்கு நினைவிருக்கிறது என ஒரு நிமிடம் சந்தோசப்பட்டாள். அடுத்த கணமே 12 மணியிலிருந்து அவன் அழைப்புக்கு காத்திருந்தது நினைவுக்கு வர, கோபம் தலைக்கேறியது.
மேடம் இன்னும் கூல் ஆகல போல இருக்கே... என்ன பண்ணா கூல் ஆவீங்க?
இதையும் என்னையே கேளு... சொந்தமா மூளையே கிடையாதா? எப்போ தான் உனக்கெல்லாம் பொறுப்பு வருமோ? உன்ன போய் லவ் பண்ணி தொலைச்சேனே... என் கெட்ட நேரம். லவ் பண்றப்பவே இப்படி இருக்க இன்னும் கல்யாணம் ஆனதுக்கப்பறம் எப்படி இருப்பியோ.
உனக்காக ராத்திரி முழுக்க மூளைய கசக்கி ஒரு gift கண்டுபிடிச்சு கொண்டு வந்தா, நீ ஒரு நிமிஷம் கூட பேச விடாம திட்டிகிட்டே இருக்க என்று பொய் சோகத்தை முகத்தில் காட்டி சொன்னான்.
அவன் சோக பாவனைக்கு சற்றும் மயங்காமல் சமி சொன்னாள் "நீ மூளைய போட்டு கசக்கினியா? சரி என்ன கொண்டு வந்திருக்க காட்டு பாப்போம். எனக்கு மட்டும் பிடிக்கல நீ செத்த என்றாள்.
சே, நம்ம expression கொஞ்சம் கூட வேலைக்கு ஆக மாட்டேங்குதே. இதே மாதிரி அவ பண்ணா மட்டும் நான் ஏமாந்துடறேன். ஒரு வேலை இன்னும் கொஞ்சம் practice வேணும் போல என்று நினைத்து கொண்டான்.
அதே நேரம் விக்கி கிளம்பிவிட்டதாக அவனுக்கு தகவல் அனுப்பியதை அவன் கை கடிகாரத்தில் இருந்த குட்டி கணிப்பொறியில் பார்த்து விட்டான்.
நிச்சயமா உனக்கு இந்த மாதிரி ஒரு பிறந்த நாள் பரிசு யாரும் தந்திருக்க மாட்டாங்க. இதோ உன் பரிசு என்று அவன் கைகளை நீட்ட, சரியாய் அந்த நேரத்தில் வண்ணமயமாய் அலங்கரிக்க பட்ட ஒரு பெட்டியை அவன் கையில் வைத்தான் விக்கி.
நல்ல வேலை விக்கி சொதப்பாம காப்பாத்திட்டான் என்று மனதுக்குள் பாராட்டிவிட்டு சமி முகத்தை பார்த்தான். விக்கி அவன் மன ஓட்டத்தை படித்து விட்டு சந்தோஷமாய் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
சமி அதை கண்கள் விரிய பார்த்தாள். அவனுக்குள் ஒரு படபடப்பு வந்தது அவளுக்கு பிடிக்க வேண்டுமே என்று. அவள் ஆவலாய் அந்த பெட்டியை திறக்க அதில் ஒரு சிறிய பந்து இருந்தது. அவள் அதை கையில் எடுத்த அடுத்த நொடி, அதிலிருந்து ஒழி பாய்ந்து அவளுக்கு எதிரில் குட்டி சமியை அவள் தாய் கையில் வைத்திருப்பது போல ஒரு முப்பரிமாண பிம்பம் உருவானது. அவள் சந்தோசத்தில் குதித்தே விட்டாள்.
இது எப்படி என்பது போல பிரித்வியை பார்க்க, அவள் பார்வையை புரிந்து கொண்டு சொன்னான் "இதுக்கு பேரு 3D hologram. ஒரு போட்டோ வெச்சு அதே மாதிரி ஒரு உருவத்தை உருவாக்க முடியும். உன்னை முதல் முறையா உங்க அம்மா தூக்கினப்ப எடுத்த போட்டோ வெச்சு உருவாக்கினது இது"
அவன் மீது இருந்த கோபம் எப்போது எப்படி காற்றாய் பரந்தது என்று அவளுக்கு தெரியவில்லை. அவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். பல முறை அவன் கேட்டும் கிடைக்காத முத்தம் இன்று விக்கியின் தயவால் கிடைத்தே விட்டது அவனுக்கு.
அந்த நிமிடம் teleporter இல்லாமலே சொர்கத்திற்கு சென்று வந்தான் அவன். சமி அந்த பெட்டியில் வேறு எதுவோ இருப்பதை பார்த்து உள்ளே இருந்து எடுத்தாள். அவள் புகைப்படத்தை வைத்து வண்ணமயமாய் உருவாக்கிய பொக்கே அது.
என்னடா இது என் போடோவ வெச்சி பொக்கே பண்ணி இருக்க? நீ என்ன லூசா?
அது ஒன்னும் இல்ல, 4 வருசத்துக்கு ஒரு முறை பூக்கிற பூ வெச்சு ஒரு பொக்கே பண்ணலாம்னு பாத்தா, உன்ன தவிர வேற ஒரு பூ கூட நாலு வருசத்துக்கு ஒரு முறை பூக்கிறது இல்ல... அதான் உன் போடோவ வெச்சே ஒரு பொக்கே பண்ணிட்டேன்.
சாரி டா. உன்னை ரொம்ப திட்டிடேனா? இந்த மாதிரி ஒரு gift நீ தருவேன்னு சத்தியமா நான் எதிர் பார்க்கவே இல்ல. I love you sooooooooo much.
அவ்வளோ தானா? ஒரு போனஸ் முத்தம் எல்லாம் கிடையாதா??? ப்ளீஸ், ப்ளீஸ் என அவன் கெஞ்சி கொஞ்சி கொண்டிருந்த வேளையில் இரண்டு பிறந்தநாளுக்கு முன்பு பார்க்க வந்த சமியின் தந்தை மீண்டும் வந்தார். அவர் வந்ததை கவனிக்காமல் அவனை சமி முத்தமிட உறைந்து போனது அவன் மட்டும் அல்ல சாமியின் தந்தையும் தான்.
சம்யுக்தா என்ன நடக்குது இங்க? என்று அவர் கத்திய போது தான் அவர் வருகையை இருவரும் உணர்ந்தார்கள்...
பகுதி - 2